Sunday, September 7, 2008

ஆயுள் தண்டனை - ராதா அத்தை


நரசய்யா தன் "ஆயுள் தண்டனை" சிறுகதையில் "ஆயுள் தண்டனையை விட ஆயுளால் கிடைக்கும் தண்டனை மிகக் கொடியது" என அக்கதையின் நாயகியான பாட்டி சொல்வதாய் சொல்லியிருப்பார்.

என் அம்மா எப்போதாவது வாழ்க்கை குறித்த எந்த Quote சொன்னாலும் அதில் அவரின் ராதா அத்தை சொன்ன சொல் அல்லது வாழ்ந்த வாழ்க்கை இருக்கும்.

சிறு வயதில் பெற்றோர் இருவரையும் இழந்தது,
இரண்டாம் தாரமாய்வாழ்க்கைப்பட்டதையே திருமணத்திற்குப் பின்தான் அறிந்தது,
நான்கு வயது மகனை இனம் புரிய நோய்க்கு பலி தந்தது,
பின்னர் பாடுபட்டு மகள்கள் இருவரையும் கரை சேர்த்தது,
பெரிய மகளின் கணவன் இதய நோயில் நான்காண்டு மண வாழ்க்கைக்குப் பிறகு இறந்தது,
அந்த மகளுக்குப் பிறந்த பேத்தியும் இதய நோயுடன் பிறந்து கண் முன்னாலேயே நாற்பது ஆண்டுகள் கன்னியாய் வாழ்ந்தது...
...என வாழ்க்கை அவரை சுற்றி சுழற்றி அடித்தது.

கணவனை இழந்த அந்த மகள், நான்கு ஆண்டு உடன் வாழ்ந்த கணவனுக்கு நாற்பது ஆண்டுகள் திவசம் வைத்தது தனிக்கதை. பெண்களுக்கான இந்தக் கொடுமைகள் இந்தியாவில் மட்டுமே பார்க்க வல்லவை.

என் அம்மா உள்பட பல பெண்களும் வாழ்க்கை நெடுக படும் இன்னல்களை நான் பார்த்து வந்தாலும், "ஆயுள் தண்டனையை விட ஆயுளால் கிடைக்கும் தண்டனை மிகக் கொடியது" என்ற இந்த வார்த்தைகள் ராதா அத்தைக்கே பொருந்துவதாய் நான் நினைக்கிறேன்.

Tolerance power - சகிப்புத்தன்மை பெண்களுக்கு சற்றே அதிகம் எனச் சொல்வார்கள். ஆனால் ஆண்டவனிடம், நீ எவ்வளவு கஷ்டம் கொடுக்கிறாயோ கொடு, நான் வாழ்ந்து காட்டுகிறேன் என தன் வாழ்க்கைப் பயணத்தைத் தொடர்ந்த விதத்தில், நான் சந்தித்த மனிதர்களில் தலை சிறந்தவராய் நான் ராதா அத்தையை பார்க்கிறேன்.

அவரது கஷ்டங்களுக்கெல்லாம் சிகரம் வைத்ததாய் வந்தது, 60 வயது நிறைந்த மகள் புற்று நோயில் அவர் கண் முன் இறந்தது. வயோதிகத்தில் வந்த இந்தக் கஷ்டம் மட்டுமே அவரை உலுக்கியது. அதன் பின் ஓராண்டு மட்டுமே அவர் வாழ்ந்தார்.

தினசரி வாழ்வில் எந்தப் பிரச்சனை வந்தாலும் அதில் இருந்து மீள inspiration-ஆக நான் எப்போதும் ஒருவரை நினைக்கிறேன் என்றால் அது ராதா அத்தையைத்தான்.

Monday, August 11, 2008

எப்போதும் பெண் - முன்னுரை

"எப்போதும் பெண்" என்ற இந்தத் தலைப்பு மறைந்த எழுத்தாளர் சுஜாதா அவர்களுக்கு சொந்தமானது. அவர் மங்கையர் மலரில் இருபது வருடங்களுக்கு முன் எழுதிய அற்புதத் தொடர் அது.

இத்தலைப்பில் அவர் எழுதியது ஒரு பெண்ணைப் பற்றி, அவள் உருவானது முதல் இறப்பது வரை.... சுஜாதாவின் தலைசிறந்த படைப்பு எனலாம் இதனை.

கடவுளின் அற்புதப் படைப்பு என்ன என்றால், என் கருத்தில் மறுப்பேதும் இல்லாமல் "பெண்" என்பேன்.

நான் இந்த blog-ல் எழுத நினைப்பது ஒரு பெண்ணின் சரித்திரம் அல்ல....நான் கடந்து வந்த பல பெண்களைப் பற்றி.....

Oops.... என்ன புருவத்தை நெறிக்கிறீர்கள்? இவர்கள் என் காதலிகள் அல்ல...! நான் வியந்து மதிக்கும் பெண்கள். அவர் என் தாயாய், தாரமாய், தோழியாய், பாட்டியாய், அத்தையாய் அல்லது நான் சந்தித்த யாரோ ஒருவராய் இருக்கலாம்.

அவர்களின் அன்பு, பொறுமை, அவர்கள் வகுத்து வாழ்ந்த நேர்மை, நான் விரும்பிய ஆனால் என்றும் பின்பற்றாத அவர்கள் வாழ்க்கை முறை, சகிப்புத்தன்மை, கோபம் என நான் வியந்த விஷயங்கள் ஏராளம் ஏராளம்.


அவ்வப்போது எழுதுகிறேன். நேரம் இருக்கையில் படியுங்கள்.