Monday, October 5, 2009

ஆண்டாள் - 1

"பெண் மார்புக்குள் ஒரு மனசுண்டு மரியாதை பண்ணுங்க
பெண் மார்புக்குள் ஒரு மனசுண்டு அட அதையும் பாருங்க"-

- கவிப்பேரரசு வைரமுத்து (ஜேஜே)

ஆண்டாள் நாம் அனைவரும் அறிந்த பன்னிரண்டு ஆழ்வார்களில் ஒருவர். விஷ்ணு பக்தை, திருப்பாவை தந்தவர், திருவில்லிப்புத்தூரில் வளர்ந்தவர், திருவரங்கன்பால் மையல் கொண்டு அவனோடு இறுதியில் ஐக்கியம் ஆனவர் என்பதெல்லாம் நம்மில் பலர் அறிந்தது.

ஆனால் பெண்மை என்ற அந்த "மை" அவருக்குத் தந்த உபத்திரவங்கள் (ஆங்கிலத்தில் challenges எனலாம் என நினைக்கிறேன்) ஏராளம் ஏராளம்.

அந்த உண்மையான ஆண்டாளின் பால் எனக்கான admiration-ஐ நான் எழுதும் முன், நம்மில் ஒருவராய் வாழ்ந்து கொண்டிருக்கும் கோடானு கோடி ஆண்டாள்களில் ஒரு சிலர் பற்றி எழுத விரும்புகிறேன். அதுவே ஆண்டாள் - 1 உருவாகும் கதை.

அந்த அஷ்டாவதானிப் பெண்.

சிலப்பல வருடங்களுக்கு முன் நாங்கள் வசித்த காலனியில் ஒரு பெண் இருந்தாள். அவள் பெயர் எனக்கு தெரியவில்லை. வயதுக்கு மீறிய வளர்த்தியுடன் அப்படியும் இப்படியும் வளைய வருவாள். எங்கள் நண்பர்கள் குழாம் அவளைக்கடக்கும் பொது எங்கள் பார்வை என்றைக்கும் அவள் கழுத்திற்கு மேலே போனதில்லை. எங்களைப் போல் விடலைப் பயல்களைக் அவள் கடக்கையில் அவள் முகம் ஒரு விதமாய், நவ ரசங்களிலும் அடக்க முடியாத முக பாவனையுடன் தவிப்புடன் இருக்கும். "ரொம்ப பண்றாடா" என்பது போன்ற இன்னும் இன்னபிற comments-உடன் நாங்கள் அவளைக் கடப்போம்.

ஒரு நாள் அவள் வீட்டில் இருந்து ஒரு அழைப்பிதழ், எங்கள் காலனியில் எல்லோர் வீட்டிற்கும் வந்தது. "டேய், அவ இப்போதானா வயசுக்கு வந்தா?" என் அன்புத் தோழனின் ஐயம்.

ஆர்வமாய் பிரித்தால், அது அவள் "நடன அரங்கேற்ற அழைப்பிதழ்". அவள் யார் யாரிடம் எங்கெங்கே என்னென்ன கற்றாள், இந்த விழா யார் தலைமையில் எங்கே நடக்கிறது என்பதை எல்லாம் படிக்கையில் தலை கிறுகிறுவென்றது. அவளைப் பற்றிய அறிமுகத்தை பெரிய பெரிய நடன சிரோன்மானிகளும், அவள் பாடும் திறமை பற்றி கர்நாடக சங்கீதத்தில் மேதைகளும் அழைப்பிதழில் சொல்லி இருந்தனர். ஆஹா என்றிருந்தது எனக்கு.

இத்தனை வருடத்திற்குப் பின்னும் இப்போதும் எங்கேனும் அவள் எங்கள் எதிரில் கடந்தால் நாங்கள் வேறு புறமாய் திரும்பி விடுவதுண்டு. அவளை எதிர் நோக்கும் அருகதையும் எங்களுக்கு இருப்பதாய் நாங்கள் நினைக்கவில்லை.

பெண் மார்புக்குள் மனசு மட்டுமா இருக்குது, இன்னும் என்னென்ன தெறமையோ ஒளிஞ்சிட்டு இருக்கு சார். கொஞ்சம் அதையும் பாருங்க.....!!!