Tuesday, June 29, 2010

அக்காவுடன் பிறந்தவர்கள்...

"அக்காவுடன் பிறந்தவர்கள் அதிஷ்டம் செய்தவர்கள்" என கலாப்ரியா எழுதிப் படித்திருக்கிறேன். உண்மைதான் என நான் தனியே சொல்லத் தேவையில்லை.



என் இசை, வாசிப்பு, எழுத்து சார்ந்த ரசனைகளும் திறன்களும் நான் என் அக்காவிடம் வாங்கிக் கொண்டவைகள்.

நாங்கள் கற்றவைகளும் கற்பித்துக் கொண்டவைகளும் இங்கே "எப்போதும் பெண்'ணில் சுருக்கி வரையயுமளவு சின்ன விஷயங்கள் அல்ல.

அவள் எழுதிய கவிதை ஒன்றை இங்கே வெளியிட்டு என் தளத்தைப் பெருமைப்படுத்திக் கொள்கிறேன்.

பகை நிழல்

இரு தலைமுறைப் பகை
வீட்டுப் பங்காளிகளுடன்.
ஆண்கள் எதிரெதிர் சந்திப்புகளில்
ஒரு முறைப்புக்குப் பின் முகம்
திருப்பிக் கொள்கின்றனர்.
பெண்கள் தலை கவிழ்ந்து
கடந்து செல்கின்றனர்.
குழந்தைகள் யாரும் பார்க்காதபோது
யாருக்கும் புரியாத பார்வைகளை
பரிமாறிக் கொள்கின்றனர்.

பகை....
அறியுமோ அறியாதோ
தன் கிளைக் கைகளில் 
பூக்களையும்
இருப்பதிலே இனிப்பான 
பழங்களையும்
அப்பாவின் சாய்வு நாற்காலிக்கு 
நிழலையும்
மதில் சுவர் தாண்டி நீட்டிக் கொண்டிருக்கிறது
அவன் வீட்டுச் செடிகளும் மரங்களும்.

Thursday, April 8, 2010

காதலுக்கு மரியாதை

காதலில் பலவகைகள் உண்டு என்று சொன்னால் என் நண்பன் ஒருவன் என்னுடன் கோபமாய்ச் சண்டையிடுவான். காதல் என்றால் அதில் ஒரே ஒரு வகைதான். உண்மையான காதல், பொய்யானது, ஊர் சுற்றும் காதல், விட்டு ஓடும் காதல், உடல் பார்க்கும் காதல் என்று பலவகை கிடையாது. அவற்றுக்கு எல்லாம் வேண்டுமானாலும் வேறு வேறு பெயர் வைத்துக் கொள்ளுங்கள். ஆனால் காதல் என்ற வார்த்தைக்கு ஒரே அர்த்தம், அது "தூய்மையான, எப்போதும் விலகாத, என்றும் மாறாத அன்பு" என்ற ஒரே பொருள்தான் என்பான்.

நான் இங்கே குறிப்பிடும் இந்தப் பெண்ணின் காதலும் அந்த வகைக் காதல்தான். தூய்மையான, என்றும் விலகாத மாறாத காதல். காதலுக்காக அவள் எதையும் விட்டுக் கொடுக்கவில்லை. அதே சமயம் காதலையும் எதற்காகவும் விட்டுத் தரவில்லை. ஒரு அபூர்வப் பெண்தான்.

அவளுக்கு ஒரு மாற்றுப்பெயர்? ஒகே லதா எனக் கொள்வோம்.

லதா ஒரு பிராமணக் குடும்பத்தைச் சேர்ந்தவள். அப்பாவுக்கு அரசு அலுவலக வாசல் ஒன்றில் பங்க் கடை ஒன்றில் வைத்துப் பிழைப்பு. கஷ்ட ஜீவனம்தான். உறவினர் வழியில் வந்த உதவி மூலம்தான் படிக்க முடிந்தது. பத்தாம் வகுப்பு படிக்கையிலேயே லதாவுக்கு காதல் பற்றிக்கொண்டது. காதலன் அவள் வீட்டு உரிமையாளர் மகன். வேற்று ஜாதி. அவனுக்கு அப்போதும் படிப்பில்லை, அதன் பின்னும் படிப்பில்லை. உத்தியோகம் அன்றும் இன்றும் அப்படியொன்றும் சொல்லும் வண்ணம் இல்லை. இவள் பி.எஸ்சி கம்ப்யூட்டர் முடித்தாள், பிரபல சாப்ட்வேர் நிறுவனம் ஒன்றில் வேலை.

வீட்டில் காதலுக்கு ஒப்புக்கொள்ள வில்லை. லதாவும் அசருவதாக இல்லை. மன மாற்றம்..??? அந்தப் பேச்சுக்கே அவள் இடம் தரவில்லை. வேலையை மாற்றினாள், சிங்கப்பூருக்குச் சென்றாள், அம்மாவுக்காக அவள் பெயரில் ஒரு வீடு கட்டித் தந்தாள், தம்பியை பொறியியல் படித்துக் கரைசேர உதவினாள். தன் கடமை ஒன்றிலும் எள்ளளவும் குறை வைக்கவில்லை. இப்போதாவது வீட்டில் காதலுக்கு பச்சைக் கோடி? ஊஹூம் அது கிடைக்கவில்லை. ஆனது சரி என்று வீட்டிற்கு தன் திருமண அழைப்பிதழைத் தந்தாள். திருமணம் முடிந்து காதல் கணவனுடன் இன்று சிங்கப்பூரில் மகிழ்ச்சியாக இருக்கிறாள்.

நானும் பள்ளிப் பருவக் காதல், கல்லூரிப் பருவக் காதல், வேலை செய்யும் இடத்தில் காதல் என பலப்பல ஜோடிகளை சந்தித்திருக்கிறேன். "ஒத்து வந்தா கல்யாணம் இல்லன்னா நீ அப்படி போ, நான் இப்படி போறேன்" என்னும் ரகங்களே இங்கே பெரும்பகுதி. இவற்றுக்கு நடுவே, நான் வாழ்க்கையின் எந்த நிலைக்குச் சென்றாலும், உலகின் எந்த பாகத்திற்குச்  சென்றாலும், நான் மனதில் வரித்தது உன்னோடு வாழும் காதல் வாழ்வை மட்டும்தான் என்பதில் லதாவிடம் இருந்த உறுதி ஈடு இணை இல்லாதது.

Image Courtesy: http://giri-art.blogspot.com/2009/01/sketch-1.html

Monday, October 5, 2009

ஆண்டாள் - 1

"பெண் மார்புக்குள் ஒரு மனசுண்டு மரியாதை பண்ணுங்க
பெண் மார்புக்குள் ஒரு மனசுண்டு அட அதையும் பாருங்க"-

- கவிப்பேரரசு வைரமுத்து (ஜேஜே)

ஆண்டாள் நாம் அனைவரும் அறிந்த பன்னிரண்டு ஆழ்வார்களில் ஒருவர். விஷ்ணு பக்தை, திருப்பாவை தந்தவர், திருவில்லிப்புத்தூரில் வளர்ந்தவர், திருவரங்கன்பால் மையல் கொண்டு அவனோடு இறுதியில் ஐக்கியம் ஆனவர் என்பதெல்லாம் நம்மில் பலர் அறிந்தது.

ஆனால் பெண்மை என்ற அந்த "மை" அவருக்குத் தந்த உபத்திரவங்கள் (ஆங்கிலத்தில் challenges எனலாம் என நினைக்கிறேன்) ஏராளம் ஏராளம்.

அந்த உண்மையான ஆண்டாளின் பால் எனக்கான admiration-ஐ நான் எழுதும் முன், நம்மில் ஒருவராய் வாழ்ந்து கொண்டிருக்கும் கோடானு கோடி ஆண்டாள்களில் ஒரு சிலர் பற்றி எழுத விரும்புகிறேன். அதுவே ஆண்டாள் - 1 உருவாகும் கதை.

அந்த அஷ்டாவதானிப் பெண்.

சிலப்பல வருடங்களுக்கு முன் நாங்கள் வசித்த காலனியில் ஒரு பெண் இருந்தாள். அவள் பெயர் எனக்கு தெரியவில்லை. வயதுக்கு மீறிய வளர்த்தியுடன் அப்படியும் இப்படியும் வளைய வருவாள். எங்கள் நண்பர்கள் குழாம் அவளைக்கடக்கும் பொது எங்கள் பார்வை என்றைக்கும் அவள் கழுத்திற்கு மேலே போனதில்லை. எங்களைப் போல் விடலைப் பயல்களைக் அவள் கடக்கையில் அவள் முகம் ஒரு விதமாய், நவ ரசங்களிலும் அடக்க முடியாத முக பாவனையுடன் தவிப்புடன் இருக்கும். "ரொம்ப பண்றாடா" என்பது போன்ற இன்னும் இன்னபிற comments-உடன் நாங்கள் அவளைக் கடப்போம்.

ஒரு நாள் அவள் வீட்டில் இருந்து ஒரு அழைப்பிதழ், எங்கள் காலனியில் எல்லோர் வீட்டிற்கும் வந்தது. "டேய், அவ இப்போதானா வயசுக்கு வந்தா?" என் அன்புத் தோழனின் ஐயம்.

ஆர்வமாய் பிரித்தால், அது அவள் "நடன அரங்கேற்ற அழைப்பிதழ்". அவள் யார் யாரிடம் எங்கெங்கே என்னென்ன கற்றாள், இந்த விழா யார் தலைமையில் எங்கே நடக்கிறது என்பதை எல்லாம் படிக்கையில் தலை கிறுகிறுவென்றது. அவளைப் பற்றிய அறிமுகத்தை பெரிய பெரிய நடன சிரோன்மானிகளும், அவள் பாடும் திறமை பற்றி கர்நாடக சங்கீதத்தில் மேதைகளும் அழைப்பிதழில் சொல்லி இருந்தனர். ஆஹா என்றிருந்தது எனக்கு.

இத்தனை வருடத்திற்குப் பின்னும் இப்போதும் எங்கேனும் அவள் எங்கள் எதிரில் கடந்தால் நாங்கள் வேறு புறமாய் திரும்பி விடுவதுண்டு. அவளை எதிர் நோக்கும் அருகதையும் எங்களுக்கு இருப்பதாய் நாங்கள் நினைக்கவில்லை.

பெண் மார்புக்குள் மனசு மட்டுமா இருக்குது, இன்னும் என்னென்ன தெறமையோ ஒளிஞ்சிட்டு இருக்கு சார். கொஞ்சம் அதையும் பாருங்க.....!!!

Saturday, August 8, 2009

இளவழகி









- யாருடைய ஓவரின் கடைசி பந்தில் மியான்டாட் சிக்ஸ் அடித்து பாகிஸ்தானை வெற்றி பெறச்செய்தார்?
- யுவராஜ் பந்தில் தொடர்ச்சியாக ஐந்து சிக்ஸர் அடித்தது யார்?
இது போன்ற கேள்விகளுக்கெல்லாம் என்னால் எளிதில் பதில் சொல்ல முடியும். இளவழகி யார் தெரியுமா என்று என் ஜூனியர் ஒருவன் ஆபீஸில் கேட்டபோது விழித்தேன்.
இந்தப் பெண் நான் வாழும் அதே அழுக்கு நிறைந்த வட சென்னையில் வாழ்பவள்.
ஒரு ரிக்ஷாக்காரரின் மகள்.
ஒரு குடிசைவாசி.

இவையெல்லாம் அல்ல இவளது identity. இவள் 2009-ஆம் ஆண்டின் உலக கேரம் சாம்பியன். வியாசர்பாடியைத் தாண்டி, சென்னை டிவிஷன்-ஐ கடந்து, மாநிலங்களை வென்று அதன் பிறகே இந்தப் பெண் தாய்லாந்து சென்றிருப்பாள், கோப்பையை வெல்ல.

வட சென்னையிலேயே வாழ்ந்து கொண்டு அதையே திட்டிக் கொண்டு (refer: என் முந்தைய blog), பலரைப் போல் என் அப்பன் எனக்கு ஒண்ணும் செய்யலை எனப் புலம்பும் நான் யோசித்துப் பார்க்கிறேன், இந்தப் பெண்ணிற்கு என்ன இருந்தது? திறமை? அது நம்மில் எல்லோருக்கும் ஏதோ ஒரு விஷயத்தில் இருக்கத்தான் செய்கிறது. பின்னே என்ன?
எனக்குத் தெரிந்து அது முயற்சியும் தன் தன்னம்பிக்கையும்தான். இந்தப் பெண் கூட நம்மை inspire செய்ய வில்லை என்றால் யார்தான் செய்வார்கள்?

Sunday, September 7, 2008

ஆயுள் தண்டனை - ராதா அத்தை


நரசய்யா தன் "ஆயுள் தண்டனை" சிறுகதையில் "ஆயுள் தண்டனையை விட ஆயுளால் கிடைக்கும் தண்டனை மிகக் கொடியது" என அக்கதையின் நாயகியான பாட்டி சொல்வதாய் சொல்லியிருப்பார்.

என் அம்மா எப்போதாவது வாழ்க்கை குறித்த எந்த Quote சொன்னாலும் அதில் அவரின் ராதா அத்தை சொன்ன சொல் அல்லது வாழ்ந்த வாழ்க்கை இருக்கும்.

சிறு வயதில் பெற்றோர் இருவரையும் இழந்தது,
இரண்டாம் தாரமாய்வாழ்க்கைப்பட்டதையே திருமணத்திற்குப் பின்தான் அறிந்தது,
நான்கு வயது மகனை இனம் புரிய நோய்க்கு பலி தந்தது,
பின்னர் பாடுபட்டு மகள்கள் இருவரையும் கரை சேர்த்தது,
பெரிய மகளின் கணவன் இதய நோயில் நான்காண்டு மண வாழ்க்கைக்குப் பிறகு இறந்தது,
அந்த மகளுக்குப் பிறந்த பேத்தியும் இதய நோயுடன் பிறந்து கண் முன்னாலேயே நாற்பது ஆண்டுகள் கன்னியாய் வாழ்ந்தது...
...என வாழ்க்கை அவரை சுற்றி சுழற்றி அடித்தது.

கணவனை இழந்த அந்த மகள், நான்கு ஆண்டு உடன் வாழ்ந்த கணவனுக்கு நாற்பது ஆண்டுகள் திவசம் வைத்தது தனிக்கதை. பெண்களுக்கான இந்தக் கொடுமைகள் இந்தியாவில் மட்டுமே பார்க்க வல்லவை.

என் அம்மா உள்பட பல பெண்களும் வாழ்க்கை நெடுக படும் இன்னல்களை நான் பார்த்து வந்தாலும், "ஆயுள் தண்டனையை விட ஆயுளால் கிடைக்கும் தண்டனை மிகக் கொடியது" என்ற இந்த வார்த்தைகள் ராதா அத்தைக்கே பொருந்துவதாய் நான் நினைக்கிறேன்.

Tolerance power - சகிப்புத்தன்மை பெண்களுக்கு சற்றே அதிகம் எனச் சொல்வார்கள். ஆனால் ஆண்டவனிடம், நீ எவ்வளவு கஷ்டம் கொடுக்கிறாயோ கொடு, நான் வாழ்ந்து காட்டுகிறேன் என தன் வாழ்க்கைப் பயணத்தைத் தொடர்ந்த விதத்தில், நான் சந்தித்த மனிதர்களில் தலை சிறந்தவராய் நான் ராதா அத்தையை பார்க்கிறேன்.

அவரது கஷ்டங்களுக்கெல்லாம் சிகரம் வைத்ததாய் வந்தது, 60 வயது நிறைந்த மகள் புற்று நோயில் அவர் கண் முன் இறந்தது. வயோதிகத்தில் வந்த இந்தக் கஷ்டம் மட்டுமே அவரை உலுக்கியது. அதன் பின் ஓராண்டு மட்டுமே அவர் வாழ்ந்தார்.

தினசரி வாழ்வில் எந்தப் பிரச்சனை வந்தாலும் அதில் இருந்து மீள inspiration-ஆக நான் எப்போதும் ஒருவரை நினைக்கிறேன் என்றால் அது ராதா அத்தையைத்தான்.

Monday, August 11, 2008

எப்போதும் பெண் - முன்னுரை

"எப்போதும் பெண்" என்ற இந்தத் தலைப்பு மறைந்த எழுத்தாளர் சுஜாதா அவர்களுக்கு சொந்தமானது. அவர் மங்கையர் மலரில் இருபது வருடங்களுக்கு முன் எழுதிய அற்புதத் தொடர் அது.

இத்தலைப்பில் அவர் எழுதியது ஒரு பெண்ணைப் பற்றி, அவள் உருவானது முதல் இறப்பது வரை.... சுஜாதாவின் தலைசிறந்த படைப்பு எனலாம் இதனை.

கடவுளின் அற்புதப் படைப்பு என்ன என்றால், என் கருத்தில் மறுப்பேதும் இல்லாமல் "பெண்" என்பேன்.

நான் இந்த blog-ல் எழுத நினைப்பது ஒரு பெண்ணின் சரித்திரம் அல்ல....நான் கடந்து வந்த பல பெண்களைப் பற்றி.....

Oops.... என்ன புருவத்தை நெறிக்கிறீர்கள்? இவர்கள் என் காதலிகள் அல்ல...! நான் வியந்து மதிக்கும் பெண்கள். அவர் என் தாயாய், தாரமாய், தோழியாய், பாட்டியாய், அத்தையாய் அல்லது நான் சந்தித்த யாரோ ஒருவராய் இருக்கலாம்.

அவர்களின் அன்பு, பொறுமை, அவர்கள் வகுத்து வாழ்ந்த நேர்மை, நான் விரும்பிய ஆனால் என்றும் பின்பற்றாத அவர்கள் வாழ்க்கை முறை, சகிப்புத்தன்மை, கோபம் என நான் வியந்த விஷயங்கள் ஏராளம் ஏராளம்.


அவ்வப்போது எழுதுகிறேன். நேரம் இருக்கையில் படியுங்கள்.