காதலில் பலவகைகள் உண்டு என்று சொன்னால் என் நண்பன் ஒருவன் என்னுடன் கோபமாய்ச் சண்டையிடுவான். காதல் என்றால் அதில் ஒரே ஒரு வகைதான். உண்மையான காதல், பொய்யானது, ஊர் சுற்றும் காதல், விட்டு ஓடும் காதல், உடல் பார்க்கும் காதல் என்று பலவகை கிடையாது. அவற்றுக்கு எல்லாம் வேண்டுமானாலும் வேறு வேறு பெயர் வைத்துக் கொள்ளுங்கள். ஆனால் காதல் என்ற வார்த்தைக்கு ஒரே அர்த்தம், அது "தூய்மையான, எப்போதும் விலகாத, என்றும் மாறாத அன்பு" என்ற ஒரே பொருள்தான் என்பான்.
நான் இங்கே குறிப்பிடும் இந்தப் பெண்ணின் காதலும் அந்த வகைக் காதல்தான். தூய்மையான, என்றும் விலகாத மாறாத காதல். காதலுக்காக அவள் எதையும் விட்டுக் கொடுக்கவில்லை. அதே சமயம் காதலையும் எதற்காகவும் விட்டுத் தரவில்லை. ஒரு அபூர்வப் பெண்தான்.
அவளுக்கு ஒரு மாற்றுப்பெயர்? ஒகே லதா எனக் கொள்வோம்.
லதா ஒரு பிராமணக் குடும்பத்தைச் சேர்ந்தவள். அப்பாவுக்கு அரசு அலுவலக வாசல் ஒன்றில் பங்க் கடை ஒன்றில் வைத்துப் பிழைப்பு. கஷ்ட ஜீவனம்தான். உறவினர் வழியில் வந்த உதவி மூலம்தான் படிக்க முடிந்தது. பத்தாம் வகுப்பு படிக்கையிலேயே லதாவுக்கு காதல் பற்றிக்கொண்டது. காதலன் அவள் வீட்டு உரிமையாளர் மகன். வேற்று ஜாதி. அவனுக்கு அப்போதும் படிப்பில்லை, அதன் பின்னும் படிப்பில்லை. உத்தியோகம் அன்றும் இன்றும் அப்படியொன்றும் சொல்லும் வண்ணம் இல்லை. இவள் பி.எஸ்சி கம்ப்யூட்டர் முடித்தாள், பிரபல சாப்ட்வேர் நிறுவனம் ஒன்றில் வேலை.
வீட்டில் காதலுக்கு ஒப்புக்கொள்ள வில்லை. லதாவும் அசருவதாக இல்லை. மன மாற்றம்..??? அந்தப் பேச்சுக்கே அவள் இடம் தரவில்லை. வேலையை மாற்றினாள், சிங்கப்பூருக்குச் சென்றாள், அம்மாவுக்காக அவள் பெயரில் ஒரு வீடு கட்டித் தந்தாள், தம்பியை பொறியியல் படித்துக் கரைசேர உதவினாள். தன் கடமை ஒன்றிலும் எள்ளளவும் குறை வைக்கவில்லை. இப்போதாவது வீட்டில் காதலுக்கு பச்சைக் கோடி? ஊஹூம் அது கிடைக்கவில்லை. ஆனது சரி என்று வீட்டிற்கு தன் திருமண அழைப்பிதழைத் தந்தாள். திருமணம் முடிந்து காதல் கணவனுடன் இன்று சிங்கப்பூரில் மகிழ்ச்சியாக இருக்கிறாள்.
நானும் பள்ளிப் பருவக் காதல், கல்லூரிப் பருவக் காதல், வேலை செய்யும் இடத்தில் காதல் என பலப்பல ஜோடிகளை சந்தித்திருக்கிறேன். "ஒத்து வந்தா கல்யாணம் இல்லன்னா நீ அப்படி போ, நான் இப்படி போறேன்" என்னும் ரகங்களே இங்கே பெரும்பகுதி. இவற்றுக்கு நடுவே, நான் வாழ்க்கையின் எந்த நிலைக்குச் சென்றாலும், உலகின் எந்த பாகத்திற்குச் சென்றாலும், நான் மனதில் வரித்தது உன்னோடு வாழும் காதல் வாழ்வை மட்டும்தான் என்பதில் லதாவிடம் இருந்த உறுதி ஈடு இணை இல்லாதது.
Image Courtesy: http://giri-art.blogspot.com/2009/01/sketch-1.html
Image Courtesy: http://giri-art.blogspot.com/2009/01/sketch-1.html
எப்பவும் போல இப்பவும் நல்ல ஒரு பதிவ செஞ்சுட்டிங்க...
ReplyDeleteவாழ்த்துகள்!
மனிதர்கள் எப்படியெல்லாம் இருக்காங்க பாத்தீங்களா? இவ்வளவு நல்ல பெண்ணைப் புருஞ்சிக்காத பெற்றோரை நினைக்க வருத்தமாத்தான் இருக்கு. அந்தப் பெண்ணை ஒண்ணும் குத்தம் சொல்றதுக்கு இல்ல.
பாதி படிக்கும்போது, என்னடா இது, கிரி அவள் ஒரு தொடர்கதையை எழுதிகிட்டு இருக்காரேன்னு, நினைச்சன். நல்ல வேலை அப்படி ஒண்ணும் செய்யல.
அதுக்கு உங்களுக்கு மட்டுமில்லே, அந்த பெண்ணோட பெற்றோருக்கும் நன்றி சொல்லணும். நொண்டி பொண்ணு, குடிகாரத் தம்பின்னு அவங்க பாட்டுக்கு பெத்துத் தள்ளியிருந்தா அந்த பெண்ணோட நிலைம? நல்ல வேலை, அவள் ஒரு சிறுகதை ஆனாள்.
இதுபோல இன்னும் பல பயனுள்ள பதிவுகளை செய்யும்படிக் கேட்டுக்கொள்கிறேன்.
//அவனுக்கு அப்போதும் படிப்பில்லை, அதன் பின்னும் படிப்பில்லை. உத்தியோகம் அன்றும் இன்றும் அப்படியொன்றும் சொல்லும் வண்ணம் இல்லை.//
ReplyDeleteஅந்த பெண்ணின் காதலில் தூய்மை தெரிகிறது. ஆனால் அந்த ஆண் ? தனக்காக இவ்வளவு செய்ய அந்த பெண் தயாராக இருந்த போது குறைந்த பட்சம் படிப்பு, வேலை என்று தன்னை நிலை நாட்டிக் கொள்ள இயலாத ஒரு ஆணுக்கு பெற்றோர் அதுவும் வறுமையில் வாழ்கையின் கசப்புகளை அனுபவித்து விட்டே பெற்றோர் எப்படி சம்மதம் தருவார்கள்?
அந்த பெண் இப்போது நலமாக இருக்கிரறாரா?
@ Virutcham
ReplyDeleteநன்றி!
ஆம்...நலமாய் இருப்பதைத் தான் அறிகிறேன்...