Tuesday, June 29, 2010

அக்காவுடன் பிறந்தவர்கள்...

"அக்காவுடன் பிறந்தவர்கள் அதிஷ்டம் செய்தவர்கள்" என கலாப்ரியா எழுதிப் படித்திருக்கிறேன். உண்மைதான் என நான் தனியே சொல்லத் தேவையில்லை.



என் இசை, வாசிப்பு, எழுத்து சார்ந்த ரசனைகளும் திறன்களும் நான் என் அக்காவிடம் வாங்கிக் கொண்டவைகள்.

நாங்கள் கற்றவைகளும் கற்பித்துக் கொண்டவைகளும் இங்கே "எப்போதும் பெண்'ணில் சுருக்கி வரையயுமளவு சின்ன விஷயங்கள் அல்ல.

அவள் எழுதிய கவிதை ஒன்றை இங்கே வெளியிட்டு என் தளத்தைப் பெருமைப்படுத்திக் கொள்கிறேன்.

பகை நிழல்

இரு தலைமுறைப் பகை
வீட்டுப் பங்காளிகளுடன்.
ஆண்கள் எதிரெதிர் சந்திப்புகளில்
ஒரு முறைப்புக்குப் பின் முகம்
திருப்பிக் கொள்கின்றனர்.
பெண்கள் தலை கவிழ்ந்து
கடந்து செல்கின்றனர்.
குழந்தைகள் யாரும் பார்க்காதபோது
யாருக்கும் புரியாத பார்வைகளை
பரிமாறிக் கொள்கின்றனர்.

பகை....
அறியுமோ அறியாதோ
தன் கிளைக் கைகளில் 
பூக்களையும்
இருப்பதிலே இனிப்பான 
பழங்களையும்
அப்பாவின் சாய்வு நாற்காலிக்கு 
நிழலையும்
மதில் சுவர் தாண்டி நீட்டிக் கொண்டிருக்கிறது
அவன் வீட்டுச் செடிகளும் மரங்களும்.